செவ்வாய், 23 நவம்பர், 2010

வலம்புரி, வலம்புரி விநாயகர், ஸ்வஸ்திகம் நந்தியாவர்த்தம்

வலம்புரி
PART - 1
வலம்புரி சங்கு
சங்கநிதி பதுமநிதி

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                        சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தைத் தாங்கியிருப்பது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி என்று அவற்றை கூறுவார்கள்.
                        சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை
வலம்புரிச் சங்கு என்பார்கள்.


வலம்புரி                                                இடம்புரி


                        இடம்புரியை 'வாமாவர்த்தம்' என்றும் வலம்புரியை 'தக்ஷ¢ணாவர்த்தம'் என்றும் சொல்வார்கள்.
                        வலம்புரியா, இடம்புரியா என்று எப்படி நிர்ணயிப்பது?                   

சங்கின் நுனி மேல்புறமாக நோக்கியிருக்குமாறு வைத்திருக்கவேண்டும். கைகளை முஷ்டி பிடிக்கவேண்டும். ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை உள்ளங்கைக்குள் அடங்கியிருக்குமாறு மடக்கிவைக்கப்பட்டிருக்கவேண்டும். பெருவிரல் மேல்நோக்கி நீட்டப்பட்டிருக்கவேண்டும். சங்கின் உட்புறச் சுழற்சி எந்தக் கையின் விரல்களின் உட்புறச்சுழற்சியோடு ஒத்து இருக்கிறதோ, அந்தக் கையை ஒத்த சங்கு அது. வலக்கையுடன் ஒத்திருந்தால் அது வலம்புரி.
 

வலம்புரிச் சுற்று
                       இந்த இடத்தில் உயிரியல் நூலைக் கொஞ்சம் தொட்டுப் பார்ப்போமே? இயற்கையின் பல விதிகளில் Mutation என்பதும் ஒன்று. சாதாரணமாக எந்த உயிரினத்திலும் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் அவற்றின் பாரம்பரிய குணாதிசயங்களைப் பொறுத்தே அமையும்.ஆதியில் மூதாதையரிடமிருந்து வந்த ஜீன்களின்மூலம் கிடைக்கப் பெற்ற குணாதிசயங்கள்தாம் அந்த வம்சத்தில் வந்த வாரிசுகளிடையே தோன்றும்.இந்தப் பொது விதி பல சமயங்களில் பிறழ்ந்துவிடும். அதுவரைக்கும் அந்த குறிப்பிட்ட வம்சாவளியிடம் காணப்படாத முற்றிலும் புதிய குணாதிசயம் திடீரென்று தோன்றிவிடும். இத்தகைய மாறுதலைக் கொடுக்கும் புதிய ஜீன் தோன்றியதாலேயே இவ்வாறு ஏற்படும்.
                        இந்த மாதிரி பிறழ்ச்சியின் மூலம் ஏற்படும் குணாதிசயங்கள்கொண்ட ஜீவராசி தோன்றுவதை Mutation என்றும் அந்த ஜீவராசியை Mutant என்றும் குறிப்பிடுவார்கள்.
                        அணுசக்தியின் வெளிப்பாட்டின்போது ஏற்படும் கதிர்வீச்சால் மியூட்டேஷன் ஏற்படும். சூரியனின் கதிர்களிலும்கூட இந்த மாதிரியான ஆற்றல் உண்டு.
                        பல்லாயிரக்கணக்கான இடம்புரிச்சங்குகளில் ஒரே ஒரு வலம்புரிச்சங்கு தோன்றுவது மியூட்டேஷன ்மூலமாகத்தான்.
                        ஆகவே வலம்புரிச ்சங்கு எனப்படுவது ஒரு மியூட்டண்ட் ஸ்ட்ரேய்ன் எனப்படும் ஜீவராசி. அது தனிப்பட்ட இனமில்லை.
                        வலம்புரிச் சங்குகள் இயற்கையில் அதிகம் காணப்படமாட்டா. அதிலும் வெண்சங்கு எனப்படும் பால்சங்கில் வலம்புரி ஏற்படுவது மிக அபூர்வமானது. அதுவும் பெரியதாக இருப்பது இன்னும் அபூர்வம்.  ("ஆனாலும்கூட தற்காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளிலும் கோயில்களிலும் வலம்புரிச சங்குகள் வாங்கி வைத்திருக்கிறார்களே. கலைப்பொருள்கள் விற்குமிடங்களிலும் பூசைக்குரிய சாமான்கள் விற்கும் ஒவ்வொரு கடையிலும்  நூற்றுக்கணக்கில் வலம்புரிச்சங்கு வைத்திருக்கிறார்களே?" என்ற கேள்வி எழலாம். அதெல்லாம் பிறந்த இடத்தின் மகிமையைப் பொறுத்தது. வலம்புரிச் சங்கின் பிறப்பிடம் கடல். ஏதோ ஒருவகை (இ)-மி(யூ)ட்டேஷனால் அது பிலாஸ்ட்டிக் தொழிற்சாலைகளிலும் தற்காலத்தில் பிறக்கிறது.)
                        பால்கடலிலிருந்து லட்சுமியுடன் சங்கும் தோன்றியது. ஆகையால்தான் சங்கை அவ்வளவு விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். 'வலம்புரிச் சஙெடுத்துப் பாலூட்டுதல'் என்பது செல்வச்சிறப்பைக் காட்டுவது.
                        வலம்புரிச ்சங்குகளில் தலைமையானது விஷ்ணுவின் ் கரத்தில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு. அதை அவர் சிவபெருமானிடமிருந்து திருவலம்புரி என்னும் திருத்தலத்தில் பெற்றாராம்.
                        செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரனிடம் நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் உண்டு. அவற்றை வண்டோகை, மனோகை, பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை,காளை, மகாகாளை, சர்வரத்னம் என்று தமிழ் நூல்கள ்குறிப்பிடுகின்றன.
                        அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை சங்கநிதி பதுமநிதி என்னும் என்னும் பெருநிதிகள். பல கோடிக்கணக்கான பொன் மதிப்புப்பெற்றவை.
   
    சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
        தரணியோடு வானாளத் தருவரேனும்
    மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
        மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லராகில்
    அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
        ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
        அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.

                        இந்தப் பாடல் திருநாவுக்கரசர் பாடியது.  'சங்கநிதி பதுமநிதியும் தந்து, நிலம் மட்டுமின்றி வான் முழுவதையும் ஆட்சி புரியத் தந்தாலும் அந்த தந்தவர்கள் 'சிவனை ஒரே தேவன;் முடிவான தேவன்' என்ற கொள்கையில் இல்லாதவராக இருந்தால், மங்குபவர்களாகிய அவர்கள் கொடுக்கும் அந்த செல்வங்களை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அங்கமெல்லாம் குறைந்து அழுகிய நிலையில், முற்றிய தொழுநோயால் பீடிக்கப்பட்டவராகவும், மாட்டை உரித்து உண்டு உழலும் புலையராக இருந்தாலும்கூட, அவர்கள் கங்கையை அணிந்த எம்பிரானார்க்கு அன்பராக இருந்தால் அவர்களே நாம் வணங்கும் கடவுளர் .

                        இடம்புரி வலம்புரி தன்மைகளை நாம் இயற்கையில் பல பொருட்களில் பார்க்கலாம்.
மலர்களில் இந்த இருவித தன்மைகளும் உண்டு. அவற்றின் இதழ்களின் சுழற்சி இந்த விதமாக இருக்கும். இலைகள் விடுவதிலும் கிளைகள் விடுவதிலும்கூட இதைக் காணலாம்.


PART - 2
வலம்புரி விநாயகர்
                        சாதாரணமாக எங்கும் காணப்படும் விநாயகர் வடிவங்கள் நான்கு கரங்களுடன் காணப்படும். கீழ் வலக்கையில் தம்முடைய தந்தத்தை வைத்திருப்பார். இடக்கையில் மோதகம் இருக்கும். அந்த மோதகத்தின்மீது அதைச் சற்று கௌவியவாறு துதிக்கையின் நுனி இருக்கும். மேல் கைகளில் அங்குசமும் பாசமும் இருக்கும்.
                        வலம்புரி விநாயகர் வடிவங்கள் நான்கு கரங்களுடன் காணப்படும்.  துதிக்கை வலப்புறமாகத் திரும்பியிருக்கும். அல்லது சுழற்றப்பட்டிருக்கும்.
                        விநாயகருக்கு 32 மூர்த்தி பேதங்கள் உண்டு. அவற்றில் பதினாறு முக்கியமானவை.
அந்த முப்பத்திரண்டில் உள்ள சில மூர்த்தங்கள் வலம்புரியாக விளங்கும்.
                        மஹாகணபதி என்னும் மூர்த்தம் ஒன்று இருக்கிறது. இது பத்துக்கரங்களுடையது. கரும்பு, கருங்குவளை, தாமரை, நெற்கதிர், சக்கராயுதம், கதாயுதம், பாசம், மாதுளம்பழம், தம்முடைய தந்தம், முதலியவற்றை ஏந்திய கரங்களுடன் தம்முடைய சக்தியாகிய வல்லபையை அணைத்தவாறு ஒருகை இருக்கும். மூஷிகவாகனத்தின் மீது அமர்ந்துள்ள மகா கணபதி தம்முடைய இடது தொடையின்மீது வல்லபையை அமரச்செய்திருப்பார். வல்லபாதேவி தம்முடைய கையில் தாமரை மலரை ஏந்தியிருப்பார். 
                        மஹாகணபதியின் துதிக்கை வலப்புறமாகச் சுழித்திருக்கும். அதில் ரத்தின கலசம் ஒன்று இருக்கும். அதில் அமுதம் இருக்கும்.
                        இதே மாதிரியான வேறு சில வலம்புரிகளும் உண்டு.
                        மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள அம்மன் சன்னிதிக்குள் நுழைந்ததும் அங்கு அஷ்டசக்தி மண்டபம் இருக்கும். அந்த மண்டபத்தைக் கடந்து உட்செல்லப்போகும் வாயிலின் இடப்புறத்தில் மஹாகணபதியின் பெரிய சிலையைக் காணலாம். ஏதோ காரணத்தால் அந்தச் சிலையை பின்னப ்படுத்தி யிருக்கிறார்கள்.


மதுரை மீனாட்சியம்மன் கோயில்
அஷ்டசக்தி மண்டபத்து
ஸ்ரீவல்லபா சமேத மஹாகணபதி

                        அதே மாதிரி இன்னொரு சிலையை ஆயிரக்கால் மண்டபத்தின் வாசலில் காணலாம். சாதாரணமாக அந்த அற்புதச்சிலை பார்வையில் படமாட்டாது. ஐந்தே நா¡ட்களில் இருபது கோயில்களுக்குப் போகும் பெக்கேஜ் டூர் அடிப்பவர்கள் கண்களுக்கு நிச்சயம் படவே மாட்டாது. உள்ளூர்க்காரர்கள் கவனித்தேயிருக்கமாட்டார்கள்.
                        ஆனால் அற்புதமான சிலை.
                        அஷ்டசக்தி மண்டபத்தில் இருக்கும் மகாகணபதியை ஓவியர் மணியம் வண்ண ஓவியமாக வரைந்திருக்கிறார்.
                       
                        தற்சமயம் பிரபலமாக விளங்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஒரு வலம்புரி விநாயகர்.   தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழைய விநாயகர் வடிவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வலஞ்சுழிப் பிள்ளையார்களைக் காணலாம்.
                        தமிழகப் பிள்ளையார்களில் பழமையானவர் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர்.

 


செட்டி கற்பகவிநாயகர் பிள்ளையார்பஎன்னும் தேசிவிநாயகர்
                      செட்டிநாட்டில் இன்னும் சில இடங்களில் பழைமையான வலம்புரி பிள்ளையார்கள் உண்டு. அவை அனைத்துமே இடைக்காலப் பாண்டியர்களுக்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.
செவல்பட்டி் வலம்புரி விநாயகர்


                        செவல்பட்டியில் இருக்கும் வலம்புரி விநாயகரை மேலேயுள்ள படத்தில் காணலாம்.
மகிபாலன்பட்டி என்னும் ஊரில் குடைவரைக்கோயில் ஒன்றில் நான்கு கரங்கள் உடைய விநாயகர் உள்ளார். அவர் வலம்புரியா என்பதைப் பார்க்கவேண்டும். கைகளில் ஒன்றில் நெற்கதிர்களை வைத்திருப்பார்.
                        செல்வச்சிறப்பு மிக்க பெரும் கோயில்களில் மட்டுமே வலம்புரி விநாயகரை வைக்க வேண்டும். அந்தக் கோயிலுக்குப் பெரும் சொத்துக்கள் இருக்கவேண்டும். சங்கநிதி பதுமநிதி இருக்கவேண்டும். அந்தக் கோயில்களில் மிகச்சிறப்புமிக்க அளவில் தவறாமல் உரிய பூஜைகள் வழிபாடுகள் நிகழவேண்டும். நியமங்கள் தவறக்கூடாது. அபிஷேகங்கள் பெருமளவில் இருக்க வேண்டும். தினமும் விழா எடுக்கப்படவேண்டும்.
                        பழங்காலத்தில் இத்தகைய கோயில்கள் இருந்தன.
                        அவற்றில் வலம்புரி விநாயகருடன் சங்கநிதி பதுமநிதி ஆகியவற்றின் பிம்பங்களையும் வைத்திருப்பார்கள்.

பிரான்மலை என்னும் பறம்புமலை
                        பாரி வள்லலின் நாடாகிய பறம்புநாட்டின் தலைநகரமாக விளங்கியது பறம்புமலை. அது இப்போது பிரான்மலை என்ற பெயரில் இருக்கிறது. மதுரையிலிருந்து திருச்சி செல்லும் சாலையின் கிழக்கில் சிறிது தூரத்தில் இது இருக்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற ஸ்தலம். பிற்காலத்தில் அது திருக்கொடுங்குன்றம் என்ற பெயரைப் பெற்றது.
                        இங்கு ஓர் அபூர்வமான பெருங்கோயில் இருக்கிறது. திருக்கொடுங்குன்றீஸ்வரர், மங்கைபாகர் என்னும் இரு மூர்த்திகள் உறையும் கோயில். தமிழர்களின் ஆலயநிர்மாணக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம், ஆகியவற்றுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது இந்தக் கோயில். மலைச்சரிவில் விளங்கும் திரிசூல வடிவமாக விளங்கும் குன்றில் குடைவரையாகக் குடையப்பட்ட கருவறையில் மங்கைபாகரும் பாகம்பிரியாளும் அமர்ந்திருக்கிறார்கள். அந்தக் குன்றைச்சுற்றிலும் அதனை உஉள்ளடக்கியும் குடைந்தும் வெட்டியும் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில்.
                        பாதுகாப்பான கோட்டையாகவும் விளங்குகிறது. ஒன்றன்மேல் ஒன்றாக ஐந்து அடுக்குகளும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளடங்கிய கோட்டைகளுமாக அது விளங்குகிறது. நேரில் பார்த்தால்தான் அதன் சிறப்பும் பிரம்மாணடமும் அழகும் தெய்வீகத்தன்மையும் புரியும்.
பல அதிசயங்கள் நிறைந்தது.
                        இக்கோயிலில் வலம்புரி விநாயகருடன் சங்கநிதி பத்மநிதி ஆகிய சிலைகள் இருக்கின்றன. மஹாலட்சுமிக்கென பிரத்தியேகமான லட்சுமி மண்டபமும் உண்டு. அங்கு லட்சுமியின் சன்னிதியும் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் மைல் கணக்கில் வெகுதூரத்துக்கு பரந்து விரிந்த இயற்கைக் காட்சிகளைக் காணலாம்.

 

வலம்புரி விநாயகர்

   

                                சங்கநிதி                                                                                    பதுமநிதி

                        இக்கோயிலில் பல நிலவறைகள் மிகவும் மறைவாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான செல்வம் இருந்ததாகக் கூறுவார்கள். இன்னமும்கூட மறைந்திருப்பதாகச்சொல்வார்கள். இந்தக் கோயிலின் திரிசூலக் குன்றின் உச்சியில் கருவறை இருக்கும் இடத்துக்கெமேல் 'பெயர் சொல்ல மரம்' என்றொரு மரம் இருக்கிறது. அதன் பெயரைச் சொல்பவர்களுக்கே அந்தக் கோயிலின் சங்கநிதியும் பதுமநிதியும் சொந்தமாகும் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இன்னும் சில நிலவறைகள் இருக்குமிடம் தெரியவில்லை. யார்யாரோ தேடிவிட்டனர்.

அருவியூர்                  

                        அருவியூர் என்னும் பட்டினம் தனவைசியர்கள் குடியேறியிருந்ததொரு பேரூர். நானாதேசிகள் எனப்படும் சமூகத்தினருக்கு உரியது. திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகக்குழுவின் தலைமையகமாக இருந்தது.
                        மர்மமான முறையில் அது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோனது.
                        அந்த வட்டாரத்தில் உள்ள முக்கியமான கோயிலாக உள்ள பிரான்மலைக் கோயில் அருவியூர் தனவைசியர்களுக்குப் பாத்தியப்பட்ட கோயிலாக இருந்தது.
                        அருவியூரின் சிதைவுகளில் பல சிலைகள் துண்டு துண்டாகக் கிடப்பதைக் காணலாம்.
                        பல விநாயகர் சிலைகளும் உண்டு. அவை தற்சமயம் காணப்படும் விநாயகர் சிலைகளைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். இவற்றில் பல சிலைகள் இடைக்காலப் பாண்டியர் காலத்தவை.
                        அருவியூர்ச் சிதைவுகளில் சில வலம்புரி விநாயகர் சிலைகளைக் கண்டுபிடித்தேன்.
அவை எந்தக் கோயிலில் இருந்தவை என்பது தெரியாது. இப்போது காடாகவும் பொட்டலாகவும் உள்ள இடங்களில் மண்ணில் புதைந்தும் புதையாமலும் இருக்கின்றன.,

 
மறைந்துபோன அருவியூரின் சிதைவுகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட வலம்புரி விநாயகர் சிலைகள்.


                        அருவியூருக்கு அருகில் நிருபசேகரசதுர்வேத மங்கலம் என்னும் பிரம்மதேசம் உண்டு. இப்போது அதைச் சிவபுரி என்று அழைப்பார்கள். அங்கு உள்ள திருத்தான் தோன்றீஸ்வரர் கோயிலிலும் அதனைச் சுற்றிலும் பல பழைய கற்சிலைகள் உண்டு. அந்தக் கோயில் ஒரு காலத்தில் பெரியதாக இருந்திருக்கிறது. அந்தச் சிலைகள் அங்கிருந்தவையாக இருக்கலாம். அல்லது அக்கம்பக்கத்தில் இருந்து, பின்னர் அழிந்துபோன கோயில்களைச்சேர்ந்தவையாகவும் இருக்கலாம். சிவபுரியில் ஒரு பெரிய முக்குருணி விநாயகர் உண்டு. அந்த விநாயகருக்கு இருமருங்கிலும் இரு சிலகள். அவற்றில் ஒன்று வலம்புரி விநாயகர். சிவபுரியைச ்செர்ந்ததாகவும் இருக்கலாம். வலம்புரி இடம்புரி ஆகியவற்றை ஜோடியாக இங்கு காணமுடிகிறது. ஆனால் அவை ஒரே ஸெட்டைச்செர்ந்தவைதானா என்பது தெரியவில்லை.

சிவபுரியில் உள்ள வலம்புரி விநாயகர்
   
                        தமிழகத்தில் திருவலஞ்சுழி என்னும் தலத்தில் காவிரியாறு வலப்புறமாகச் சுழித்துக்கொண்டு ஓடும். அங்குள்ள சிவபெருமானுக்கு வலஞ்சுழி நாதர் என்று பெயர். அங்கு சுவேத விக்னேஸ்வரர் என்னும் வலஞ்சுழிப் பிள்ளையாராகிய வெள்ளைப்பிள்ளையார் சுவேதவாரணராக இருக்கிறார்.
                        பாற்கடலில் லட்சுமியுடன் தோன்றிய அமிர்தத்திலிருந்து இந்திரன் செய்துவைத்த பிள்ளையார் என்று புராணம் கூறும். 

PART - 3
ஸ்வஸ்திகம்
நந்தியாவர்த்தம்

நந்தியாவர்த்தம் என்னும் நந்தியாவட்டை
                        லட்சுமிகரமான மலர்களில் நந்தியாவட்டை என்னும் மலரும் ஒன்று. நந்தியாவர்த்தம் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். இந்த மலர் சிவனுக்கு மிகவும் உகந்தது. அம்பிகை, முருகன் விநாயகர் ஆகியோருக்கும் லட்சுமிக்கும் அது உகந்ததாகவே இருக்கிறது. இம்மலருக்கு மருத்துவ குணங்களுண்டு.
                        நந்தியாவட்டத்தில் சிலவகைகள் உண்டு.
                        பூஜைக்குச் சிறப்பாகப் பயன்படும் மலர் வகையில் ஐந்து இதழ்கள் இருக்கும். அந்த மலரின் இதழ்கள் வலம்புரியான சுழற்சியுடையவையாக இருக்கும். நான்கு இதழ்கள் கொண்ட மலரைப் பார்க்கும்போது ஸ்வஸ்திக் சின்னம்போல தோன்றும். அபூர்வமாக ஆறு இதழ் மலர் காணப்படுவதுண்டு.                
 
நந்தியாவட்டை - நாலிதழும் ஐயிதழும் ஸ்வஸ்திகம்
   
                        சங்கில் வலம்புரி, இடம்புரி என்று பேசினோமல்லவா?
                        அதுபோலவே ஸ்வஸ்திகத்திலும் வலம்புரி, இடம்புரி உண்டு.
                        ஸ்ரீயாகிய லக்ஷ்மியின் இருப்பிடங்கள், சின்னங்களில் ஸ்வஸ்திகமும் ஒன்று. 

                        பழங்காலத்தில் எந்த முக்கியமான மங்களாசாசனம் எழுதும்போதும் 'ஸ்வஸ்திஸ்ரீ' என்றே  தொடங்குவது வழக்கம். 'ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு' என்பது பாண்டியர்களின் மெய்கீர்த்திகளில் ஓர் எடுத்துக்காட்டு. 'ஸ்வஸ்தம்' என்றாலே 'எல்லாம் அதது அததாக, இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது' என்றும் பொருளாகிறது. உடலின் நிலையில் எந்தவிதமான நோயும் ஏற்படாமல் அது இருக்கவேண்டிய தன்மையில் இருக்கக்கூடிய நிலையை 'ஸ்வஸ்தம்' என்று சொல்வதாக காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் சொல்லியிருக்கிறார்.
                        'ஸ்வஸ்தி' என்பதே லக்ஷ்மிகரத்தைக் குறிப்பதுதான். ஆகவே  ஸ்வஸ்திகமும் லக்ஷ்மியின் சின்னமாக விளங்குகிறது.
                        லக்ஷ்மியின் சின்னமாகிய ஸ்வஸ்திகம் வலம்புரியாக விளங்கும். வலதுகையை முகத்து நேரே வைத்துக்கொண்டு பெருவிரலை உங்கள் முகத்துக்கு நேரே நீட்டிக்கொள்ளுங்கள். மற்ற விரல்களை கையிலிருந்து 90 டிகிரியில் மடக்குங்கள். இப்போது விரல்கள எந்தப் பக்கமாய்த் திரும்பியுள்ளன? இந்த மாதிரி ஆரக்காரல்களைத் திருப்பியவாறு இருப்பது வலம்புரி ஸ்வஸ்திகம்.  Anti-clockwise. இடது கையை அவ்வாறு வைத்துக்கொண்டு பார்த்தீர்களானால் இடம்புரி ஸ்வஸ்திகத்தைக் கண்டுபிடிக்கலாம்.
                        ஸ்வஸ்திகம் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் புனிதமாக விளங்கியது. ஐரோப்பாவின் பழங்குடியிர் சிலரிடமும்கூட ஸ்வஸ்திகம் இருந்தது.

 

                        இதை ஆரியர்களின் சின்னமாக ஜெர்மன் சர்வாதிகாரி அடால்·ப்  ஹிட்லர் கருதினார். ஆகையால் தம்முடைய நாட்ஸிக் கட்சியின் சின்னமாகவும் ஜெர்மன் சாம்ராஜ்யமாகிய்ய மூன்றாமூன்றாவது
 ரை·க்ஹின் சின்னமாகவும் அதனை ஏற்படுத்திக்கொண்டார்.
                        அந்த சின்னத்தை ஒரு தெய்வீக சின்னத்துக்குரிய மரியாதைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்கள் ஜெர்மானியர்.
   
                        ஹிட்லருக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. கடைசிவரைக்கும் ஜோதிடர்களையும் கலந்தாலோசித்துக்கொண்டே தோற்றுக்கொண்டிருந்த யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். ஏசு பெருமானாரைச் சிலுவையில் அறைந்தபின்னர், அக்கால வழக்கப்படி ஓர் ஈட்டியால் விலாவில் குத்தியிருக்கிறார்கள். அந்த ஈட்டி யாரிடம் இருக்கிறதோ, அவன் இந்த உலகம் முழுவதையும் கைப்பற்றி ஆளமுடியும் என்ற நம்பிக்கை பிற்காலத்தில் எவ்வாறோ ஏற்பட்டுவிட்டது. அதனால் அதைத் தேடி அலைந்தவர்கள் அனேகர். அந்த ஈட்டியை ஹிட்லரும் ரகசியமாகத் தேடியிருக்கிறார்.
                        ஸ்வஸ்திகத்தை தம்முடைய சின்னமாக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது சில மர்மசாத்திரங்களின் அடிப்படையில்தான். ஹிட்லருடைய ஸ்வஸ்திகம் இடம்புரி ஸ்வஸ்திகம். அத்துடன் இல்லாமல் horizontal-vertical alignment-இல் இராமல், வலப்புற மேல் ஆரக்கால் 45 டிகிரி மேல்நோக்கியவாறு உச்சியில் இருக்குமாறு வைத்துக்கொண்டார்.

 
ஹிட்லரின் ஸ்வஸ்திகா
                1920-ஆம் ஆண்டில் இந்தச் சின்னத்தை டாக்டர் ·ப்ரீட்ரி·க் க்ரோனா என்னும் பல் டாக்டர் ஹிட்லரிடம் கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்தது வலம்புரி ஸ்வஸ்திகம்.  ஹிட்லர் ஒரு மர்மமான காரணத்தை முன்னிட்டு அதைக் கண்ணாடி பிரதிபிம்பம் போல் மாற்றி அதனையும் நாற்பத்தைந்து டிகிரி திருப்பிவிட்டுக்கொண்டார். இது ஒரு தாந்திரிக யந்திரம்.தம்மை எதிர்ப்பவர்களையெல்லாம் ஸ்ரீயின் நெகட்டிவ் பிரதியாகிய அலக்ஷ்மியின் பாதிப்புகள் பீடிக்குமாறும் தமக்கு வெற்றி ஏற்படுமாறும் செய்துகொள்வது அந்த அமைப்பின் குறிக்கோள்களில் ஒன்று.

                        ஆனால் ஒரு குறிப்பிட ஆண்டு, மாதங்களுக்கு மட்டுமே அந்த விளவுகள் இருந்தன.

                        மாந்திரிகர்கள் மாந்திரிகத்தால் பாதிப்புறுவதுபோல இந்த ஸ்வஸ்திகமும் இடம்புரியாக இருந்ததால் அதன் எதிர்மறையான விளவுகளைப் பிரயோகித்தவர்களின் பேரிலேயே காட்டிவிட்டது.

                        ஹிட்லரின் வீழ்ச்சிக்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்வார்கள்.

ஸ்வஸ்திஸ்ரீ - லட்சுமிகரம்
                        லட்சுமிகரமாக இருப்பதைக் குறிக்கும் சொல் 'ஸ்வஸ்தி' என்பது.
                        பழங்கால தமிழ் மன்னர்கள் தங்களின் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் 'ஸ்வஸ்திஸ்ரீ" என்று ஆரம்பத்திருப்பார்கள். 'ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸோவன்ஸோ ஸோவன்ஸோ' என்று அந்த வாசகம் வரும். ஸவஸ்திகம் என்றும் சுவத்திகம் என்றும் குறிப்பிடப்படும் Swastika -வும் இந்தத் தொடர்பானதுதான். லட்சுமிகரம், மங்கலகரத்தைக் குறிக்கக் கூடியது அந்தக் குறி.
                        'ஸ்வஸ்தி' தன்வயமாக இருததல், தன் வயத்தில் வைத்திருத்தல். அதாவது அமெரிக்கப் படங்களில் பார்க்கிறோமல்லவா.....ஒரு எல் ஏ. காப்ஸ் வாக்கி-டாக்கியை வைத்துக்கொண்டு சியூயிங் கம் மென்றுகொண்டு, இன்னொரு கையில் கோக் அல்லது கருங்காப்பி லோட்டா வைத்துகொண்டு, குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டே, "situation is well undercontrol. You are Go Go Go..." என்று சொல்கிறார்கள் அல்லவா?. அந்த 'situation under own-self's own control' என்பது ஸ்வஸ்தியை ஓரளவுக்குச் சித்தரிக்கும்.
                        எல்லாமே தன்வயமாக under control-ஆகக் கொண்டிருப்பதே ஒரு லட்சுமிகரம்தானே. ஈஸ்வர என்றால் தலைமையாக எல்லாவற்றுக்கும் நாயகமாக எல்லாவற்றுக்கும் சொந்தக்காரனாக இருப்பது அல்லவா?
                        'ஈஸ்வர' என்னும் தன்மையைக் குறிப்பதுதான் 'ஐஸ்வர்ய' என்னும் சொல். ஐஸ்வர்யம் என்பதும் லட்சுமிகரம்தான். லட்சுமியின் மகளாகக்கூட இருப்பதுண்டு. அஷ்டலட்சுமிகளில் ஐஸ்வர்யலட்சுமி என்றொரு மூர்த்தம் உண்டு.
                        'ஐஸ்வர்ய' என்பதில் தலைமைத்துவமும் அடங்கத்தான் செய்யும்.
                        ராஜலட்சுமி, ராஜ்யலட்சுமி என்றும் லட்சுமிகள் உண்டு. சாதாரணமாக 'அஷ்ட லட்சுமி' என்ற தொகுப்பில் இருக்கும் லட்சுமிகளின் வரிசை பட்டியலுக்கு பட்டியல் வித்தியாசமாகஇருக்கும். அஷ்ட லட்சுமிகள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் வேறொரு கணிப்பின்படி நூற்றேட்டு லட்சுமிகளும் உள்ளனர். விநாயகரிலும் நூற்றெட்டு விநாயகர்கள் உண்டு. ஒவ்வொரு மூர்த்ததுக்கும் ஒவ்வொரு மூலமந்திரம் இருக்கும். உடலும் அதன் நிலையும் ஆரோக்கியமும் தன்வயமாக undercotrol-ஆக இருக்கும் நிலையை ஸ்திதியை 'ஸ்வஸ்தம்' என்று குறிப்பிடுவார்கள்.
                        ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலையைக் குறிக்கும். அந்தக் காலங்களில் பெரியவர்கள் ஆசீர்வதிக்கும்போது 'அரோக திடகாத்ர' என்று குறிப்பிடுவார்கள். 'அரோக' என்பது ரோகமற்ற - நோயற்ற நிலையைக் குறிப்பது. 'காத்ரம்' என்பதைச் சொல்வழக்கில் சாதாரணமாக ஆகிருதியான உடல்நிலையைக் குறிப்பிடப் பயன்படுத்தினார்கள். திடமான காத்திரமும் ரோகமற்ற நிலையும் ஆசியாக வழங்கினார்கள். 'அரோக' என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது 'ஆரோக்யம்'.நோயின் வசமான உடலும் மனமும் மீண்டும் தன்னுடைய சொந்த normal-ஆன நிலைக்கு வருவதை ஸ்வஸ்தமாவது என்று குறிப்பிட்டார்கள். ஸ்வஸ்தமாக்குவது ஒரு முக்கியமான கலை. வேதங்களின் துணை நூல்களாகிய உபவேதங்களில் ஒன்றாகிய ஆயுள்வேதத்தின் ஓர் அங்கம் ஸ்வஸ்தமாக்கும் கலை. Healing, Therapy முதலிய சொற்கள் அந்தக் கலையின் அம்சங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக